search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப அட்டைதாரர்"

    பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான விலையில்லா வேட்டி- சேலைகள் லாரிகளில் திருச்சிக்கு வந்து சேர்ந்தன.
    திருச்சி:

    தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விலையில்லா வேட்டி-சேலை வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து எல்லா மாவட்டங்களுக்கும் வேட்டி-சேலைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேட்டி-சேலைகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு வந்து சேர்ந்து உள்ளன. திருச்சி மேற்கு தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலைகள் நேற்று காலை வந்தன. வேட்டி-சேலை மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கிய தொழிலாளர்கள் அதனை தனி அறைக்கு கொண்டு சென்று அடுக்கி வைத்தனர்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் சுமார் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவற்றில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் பச்சரிசி, முந்திரி பருப்பு, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி முதல் வாரம் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய அரசின் நிவாரண பெட்டகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சென்னை:

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிவாரண பெட்டகத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

    தமிழகத்தை உலுக்கிய ‘கஜா’ புயல் தனது அடையாளத்தை அழுத்தமாக பதியவிட்டு சென்றிருக்கிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கின்றன.

    கண்ணும் கருத்துமாக கவனிக்கப்பட்ட விளைநிலங்களும், பிள்ளைகள் போல வளர்த்த தென்னை மரங்களும் கடுமையாக சேதமடைந்து விட்டன. வீடுகள் சேதமடைந்து இருக்கின்றன. பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

    பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குவிந்து வருகிறது. ஆதரவுக்கரம் நீட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் உதவிகள் குவிந்து வருகின்றன.

    இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பெட்டகத்தை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிவாரண பெட்டகத்தில் 27 அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. தற்போதைய சூழலில் எல்லா விதமான அத்தியாவசிய பொருட்களும் ஒருசேர மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது.

    குறிப்பாக ‘கஜா’ புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்திருக்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 4 லட்சத்து 68 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண உதவிக்காக காத்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இதனால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்படும்போது, அக்குடும்பமே பயன்பெறும்.

    அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்பட 27 அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்து, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் ‘பேக்கிங்’ செய்து வருகின்றன.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ‘கஜா’ புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின்போதே குடும்ப அட்டைதாரர்களுக்கான நிவாரண பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

    அதனைத்தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பெட்டகம் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிவாரணம் பெட்டகம் தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லதொரு திட்டம் என்று மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து சென்னை-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகை புறப்பட்டு சென்றார். 
    ×